மொத்தப் பக்கக்காட்சிகள்

2.16.2013

இனியும் இல்லை நேரமே !...........

வங்கியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பணம்தான், என்னை கொள்ளை அடிக்க தூண்டியது' என்கிறான் ஒரு கொள்ளையன். இந்த சமாதானத்தை  ஏற்று அவனை விட்டு விடுவோமோ, விடுவதில்லை. கொலையாளி ஒருவன்' தன்னால் கொலை  செய்யப்பட்டவன் 'தான் என்னை கொலை  செய்யுமாறு தூண்டினான்,' என்கிறான் . விடுவித்து விடுவோமா? முடியாது . கூடாது. உடலளவில் தண்டிப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறபோதும் பல ஆசிரியர்கள் சற்றும்  மனிதாபிமானமே  இல்லாமல் மாணவர்களை தண்டிப்பதும் பதிவாகின்றன. அந்த மாணவர்கள் தாம் எம்மை அவ்வாறு தண்டிக்க தூண்டினார்கள் என்று  ஆசிரியர்கள் சமாதானம்  கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது.
 பிறகு  ஏன் கற்பழிப்பு வழக்குகளில் மட்டும் அத்தகைய சமாதனத்தை ஏற்க நினைக்கிறார்கள்? டெல்லியில் 23 வயதுப் பெண் கும்பல்  கற்பழிப்புக்கு உட்பட்டாள் என்கிற அதிர்ச்சித் தகவலை தொடர்ந்து  பல முகாம்களிலிருந்தும், குறிப்பாக போலிசிடமிருந்தும் இத்தகைய எதிர்வினையே எழுந்ததைக்  காணலாம். இதைவிடவும் அதிர்ச்சி தரத்தக்கது என்னவென்றால் பெருமளவு பெண்களே , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு பெண்கள்தாம் காரணம் என்று நினைப்பது தான்.
இத்தகைய மனபோக்கு நமது குடும்பதலைமை அமைப்பில் வேரோடியிருக்கிறது . அங்கே ஆண்களே எல்லா முடிவுகளையும்   எடுக்கிறவனாகவும் ,  பெண் அவற்றுக்குக் கீழ்படிந்து,  நடக்க விதித்தவளாகவும், தனக்காகவோ  தாம் விரும்புகிற வகையிலோ  வாழ நினைக்கிற எண்ணமேயில்லாதவளாகவும்  தனக்கெதிரான  துன்பங்களை தாமே வருவித்துக் கொள்வதாக நம்புகிறவளாகவும் இருக்கிறார்கள் . பிறகு வேறு என்ன நடக்கும்? பணிந்து போகிற பெண்கள் பிற பெண்களையும் பணிந்தே போகுமாறு வற்புறுத்துவார்கள். 

மகளைவிடவும் மகனுக்கே முக்கியத்துவம் தருகிற நமது குடும்பங்களிலிருந்தே   இது தொடங்குகிறது.  ஒரு பையனின் கெட்டநடத்தை  'ஆம்பிளப் புள்ளன்னா அப்படிதான் இருப்பான்' னு தள்ளுபடியாகும்.  அதனால்தான்  ஆண்கள் வன்முறை  உள்ளிட்ட  எந்த தவறையும் செய்யலாம், ஏற்றுக் கொள்ளப்படும், வெளியே வந்துவிடலாம் என்று நினைகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆண்கள். பெண்கள்தான் தமது வரையறையை அறிந்து நடக்க வேண்டியவர்களே 
தவிர ஆண்கள் அல்ல என்று நினைக்கிறார்கள். பெண்கள் மீது  குற்றம் சுமத்துகிற , பெண்களுக்கெதிரான சம்பவங்களை ஊக்குவிக்கிற  இந்த மனப்போக்கு , நிச்சியமாக  சொல்வேன், நமது வீடுகளில் நிலவுவதுதான்!.

ஒரு குடும்பத்துக்குள் ஒரு பெண்ணுக்கு  பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால்  அந்த பெண்ணுக்கு மிக நெருங்கிய உறவுக்காரியும்  கூட அந்தத் தவறுக்கு பாதிககப்பட்ட பெண்தான் முழுபொறுப்பு என்று குற்றம் சுமத்தி அந்த பெண்ணின் மீது  தவறான அபிப்ராயம் ஏற்படவும் செய்துவிடுவாள். இதனால்  குற்ற உணர்வுக்கு ஆளாகிறவள்  தனது சொந்த தாயிடமிருந்து கூட அதரவு பெற முடியதவளாகி, நம்பிக்கையிழந்து, மனச்சோர்வுக்கு ஆளாகி குற்றவாளிக்கு  எதிராகப்  புகார்  சொல்லவும் திராணியற்றவள் ஆகிறாள்.

பெண்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை ஆண்கள் மீறச் செய்கிறார்கள். ஆண்களின் குற்றங்களுக்கு பெண்களை காரணம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணமிது. அவை  ஒரு போதும் பெண்களின் குற்றங்கள் அல்லவே, அல்ல என்பதைப் பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது. எவனொருவனுக்கும்  பெண்ணுடைய அனுமதியில்லாமல் அவளைத்  தொடக் கூட உரிமையில்லை, என்பதுடன் , அவளது உடல் மீதான உரிமையும் மதிப்பும் அவள் ஒருத்திக்கே சொந்தம். சற்றும் பயமின்றி பெண்கள் பேச வேண்டிய வேளை இது.  பெண்கள் சினமூட்டப்பட்டுள்ள நேரமிது .  எரிச்சலூட்டபட்டதற்கு எதிராக போராட வேண்டும்.
துணையாளாகக் கருதும் நிலை இந்தியாவிலிருந்து மலையேறி வெகுகாலமாகிவிட்டது.  எல்லா பெண்களுக்குமான வேண்டுக்கோள்  உங்களுக்காகவும்,  உங்கள் தோழியருக்காகவும்  எழுந்து நில்லுங்கள்.  ஒரு பெண் துன்பத்திலிருப்பதைக் கண்டால் உடனே அவளது உதவிக்கு  செல்லுங்கள். அந்த கூட்டத்திலிருக்கிற எல்லா பெண்களும் காரணமானவனை சூழ்ந்துக் கொள்ளுங்கள். அவன் ஒருபோதும் மறவாதப்படி சமுதாய பாடத்தை! கற்றுக் கொடுங்கள். இதை மட்டும் இதை மட்டுமே செய்ய தொடங்குங்கள்....அப்புறம் பாருங்கள் எளியவர்களை  துன்புறுத்துகிறவர்கள் குறுகி நிற்பதை!

எளியவர்களை  துன்புறுத்துகிறவன், பாதிக்கப்பட்டவர் அஞ்சுகிறவரைதான் தாக்குப்பிடிப்பான். பெண்களின் வலிமை எப்போதுமே குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. சக்தி உடல் தசைகளில் இல்லை. பழிவாங்குதலில்  உள்ளது. ஒன்று சேர்வோம். இதற்கு  ஒன்றும் பாராளுமன்றம் மசோதா தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. கற்றரிந்தவர்களாகத்  தம்மை  கூறி கொள்ளும் சிலர்  இந்த சூழ்நிலைமைகளுக்கு பெண்கள் வரையறையின்றி உடுத்துவது தான் காரணம்  என்று நம்புவார்களானால் அவர்களுக்கு இராமாயணத்திலிருந்து ஒரு நிகழ்வை நினைவூட்ட விரும்புகிறேன். ராவணனால்  சீதை தூக்கிச் செல்லப்பட்டபோது ராமனிடமும் கொழுந்தன்  லட்சுமணனிடமும்  சில நகைகளைக் காட்டுகிறார்கள். லட்சுமணனால் காற்சிலம்பை  மட்டும்தான்   அடையாளம் காட்ட முடிந்தது. மரியாதை   காரணமாக சீதையின் கால்களை மட்டுமே எப்போதும் பார்த்தவன் லட்சுமணன். இன்றைய ஆண்களிடம் இத்தகைய மரியாதை காணாமல் போய்விட்டது.  சீதையை போல் இல்லை என்றும் ஒழுக்கம்தவறியவர்களாக இருக்கிறார்கள் என்றும் பெண்களை விமர்சிப்பதற்கு முன்பாக நீங்கள் உங்கள் மதிப்பையும் நற்பண்பையும்  இழந்துவிட்டீர்கள்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


                                                                             தி ஹிந்து   06/02/13 
                                                                             ஸ்நேஹா வர்கீஸ் .

4.02.2012

                களிக்க நீந்தக் கூடும்,
                கடக்கக்  கூடுமோ?

                மூச்சு  முட்ட  முயங்கி
                ஆழமறிய முங்கலாம்.
                காணவும் காட்டவும்    
                கடவுளா?    
           
                கண்டு, விளங்கி, களித்து,
               துய்த்து, கரைந்து,
               ஒன்றாக என்றாகும்
                இணையர்
                தீர விளையாடும்
                தீரா விளையாட்டு.
                

3.29.2012

                  நினைக்கிறேன் , நெகிழ்கிறேன்,
                  சினக்கிறேன்.......சிதைக்கிறேன்,
                  மோகாவேசமுருகிறேன்.............
                  மூர்க்கமாகிறேன், முத்தமிடுகிறேன்,
                   களிக்கிறேன் வியக்கிறேன்,
                   கரம் கூப்பி  தொழுகிறேன்.
                   கை குலுக்கியும்  மகிழ்கிறேன்.
                   இன்னும் என்னென்னவோ  ஆன நான்
                    என்னென்னவானேன்  என்று
                    எழுதுகிறேன்.

                   எழுத நேர்ந்தது
                   வாசிப்பில்  நேர்கையில்
                   தேறினேன் நான்.
                    புரியலேன்'னா
                    புரிய சொல்லப்  பயில்கிறேன்.
                    என்  அலைவரிசையில்
                    பயணிக்க இறங்குவேன்.
                     நானே  எழுதி  நானே ரசிக்க;
                     கிறங்கி மயங்க
                     கழிவறை  சுவரே போதும்.

                     வித்தையல்ல  கவிதை  , அது
                      விதை.
                      விளையும் நாளை ,
                      விளைவிக்கும்,
                       விளைந்தால்  --தழைக்கும்
                       மானுடம்.
                       மேன்மையுறும், மென்மையுறும்.

                      உழுக்கலப்பையும் , துவக்கும்
                      ஆயுதங்கள் 'தான்.
                      கவிதை  வல்லாயுதம்.

                       எமக்குத் தொழில்  கவிதை என்றவன்
                        தெளிந்தவன்; வணிகன்  அல்ல.
                       ஆதலினால், ஆதலினால்,
                        கவிதை  செய்வீர்  மானுடரே!    
                        

9.12.2011

            எங்க ஊரு நகரப்பேருந்து,
            சமயத்தில் நகரா,
,           பெருமளவு,..நரகப்பேருந்து.
            பழகிட்டு... 
            வேகமா'போறேன்னு விலா ஒடிக்காது;
            நின்னு போனாலும், வேற ஒன்னு வரும்.
            என்னைய மாதிரி வயசாளிக்கு பாதுகாப்பு.

            அன்றைக்கு மழை.
            வெளியே      தூற, 
            உள்ளே கொட்டுகிறது .
            குந்த இடமின்றி 
            எழும்பிய பயணியருடன்
             நிற்போரும்    நெரிய
             மண்டும் எரிச்சலில் 
             மானாங்காணியாய் 
..            வசவு மழை! 

               களேபாரத்துக்கிடையே
               கெக்கலி கொட்டியது
               ஒரு குழந்தை,
               தாயின் இடுப்பில் இருந்தபடியே 
               தாரையாய் வடியும்             
               மழை நீரை
               பிஞ்சுக்கைகளில்
               பிடிக்க முனைந்து 
               களித்து , வெடித்து, சிரித்து 
               கும்மாளியிட்ட
               குழந்தையை நினைந்தும்,
                நனைந்தும் 
                மழலை மழையில் 
                நான்.
     

8.28.2011


                                            கவிஞர்  சக்தி  அருளானந்தம்  அவர்களின்  " பறவைகள் புறக்கணித்த நகரம்" கவிதை தொகுதியை  பலமுறை  படித்தேன். படிக்கிறேன். படித்துக் கொண்டே  இருக்கிறேன். கவிஞரின்  ஆற்றலை  அடையாளப்  படுத்துவனவாக, கவிதைகள்........!  திரு பெருமாள் முருகன்  அவர்களின் செறிவுமிக்க அணிந்துரை  மிக சரியாகத்  தேர்ந்து  'கூடு வனைதலையும்,குஞ்சு  அணைதலையும்' கவனப்படுத்தி, தலைப்பிலிட்டிருக்கிறார் .   கவிதையுடனான அனுபவத்தைப்  பகிர்ந்துக்  கொள்ளத் தேர்ந்த ஸ்பானிய  கவிதை  வரிகள்  எண்ணற்றவற்றைச்  சொல்லக்  காத்திருக்கும்  சூலுற்ற  தாயை உணர்த்துகின்றன.
                   கவிஞர்  அவர்களுக்கு  ஒரு கடிதம்  எழுத வெகு நாட்களுக்கு  முன்னமே  எண்ணியிருந்தேன். சுருக்கமாய்  சொல்லவோ எழுதவோ தெரியாத  மனுஷன் .... நான்.  நினைப்பதையெல்லாம்  எழுதிடனமு'னு தவிப்பேன்.  படிப்பவர்களின் பொறுமையை ரொம்பவுமே  சோதிப்பேன்.  மனுஷர்களில்  மிக மிக நல்லவர்கள்  ( தாங்கள் உட்பட....) என்னையும்  சகிப்பர். இப்போது எழுதியே  தீரனுமு'னு  ஆனது, ஏன்?   என்ற வினா எழல்லே'ன்னாலும்   சொல்றேன்.  அண்மையில்  உரையாற்றும்போது  என்னையுமறியாமல் ,  "அமர்பவன் ,  சித்தார்த்தனா  இருந்தா  போதி மரம்  புத்தனாக்கும்"  என்ற 'ஞானம்'  கவிதையின் வரிகளை  குறிப்பிட்டுவிட்டு .... என்னை  நானே  சிலாகித்தவாறு  மேடையிலிருந்து  இறங்க ,  அந்த  வரிகளால்  கவரப்பட்ட  சிறப்பு  விருந்தினர் (அவருமொரு  கவிஞர்)  நான்தான் என்று  கைகுலுக்கி  பாராட்ட ,  உண்மையை  பெருமையாய்ச் சொல்லி  மகிழ்ந்தேன்.  அந்த நினைவு  வந்திட எழுதிக்கொண்டு  இருக்கிறேன்.
                       கொண்டாட தெரியாமலேயே  கோடிகணக்கான  அரிய தருணங்கள்  குப்பையாகின்றன. எத்தனை கோடி கோடி இன்பம், அத்தனையையும்  அடையாளம் காட்டும்  படைப்பாளிகள்  மனிதம்  மிளிர, மலரச்  செய்பவர்கள். அவர்கள்  காட்டுகிறவரை , அவை வெறும்  காட்சிகளே. எனவே பொறுப்புமிக்க  படைப்பாளிகள் தத்தம்  படைப்புகளால்  நிலைக்கிறார்கள். நாம் இன்றும்  நினைக்கிறோம். கவிஞரின்  கவிதைகளில்  அத்தகைய  தெளிவை  அதனாலான  வலிவை  உணருகிறேன்.

                           அடிநாக்குத் தித்திப்பாய்........கோடு, முகவரி, நவீன மனுக்கள் (புது வடிவம்) , காலக்கோலம், (காலுரச  உயிர் உரசும்  மார்கழிக்  குளிர்) துரத்தல்களும்,  விடுபடல்களும், வெளி ( விலாசிட்டீங்க ...) குருதட்சனை,  நிர்வாணம்,  அறிதலற்று.. (தாக்கத்திலிருந்து  நான்  இன்னும் மீளவில்லை)....... இவை  நினைவில் . பாராட்டுக்கள் என்றால்  போதாதுதான்  எழுதுங்கள் ...... நாங்கள் வாசிக்கிறோம் என்பதற்காக  அல்ல .....நாங்கள்   வசிக்கிறோம் என்பதை  நினைவூட்ட..........


4.08.2011

                                 **** 4  கவிதைகள்,  4  கவிஞ்ர்கள் ****
                                    
                                      
கவிஞ்ர்கள்  பொய்யர்கள் என்றொரு  கருத்து  உண்டு. மிகையாகவும், உவமித்தும், உருவகமாகவும் செய்திகளை வழங்குகிறபோது  உண்மைநிலை  காணாமல் போகிற வாய்ப்பு காரணமானது. மாறாக இன்று  மனிதம்  பேசும்  கவிதைகள்  உண்மையை  முகத்திலறைந்தது  போல  வெளிப்படுத்தி  விடுகின்றன.அழகுணர்ச்சி  என்று  வருணனைகளில்  வாழ்ந்திருந்த  கவிஞ்ர்களும்,  கவிதைகளும்  தரையிறங்கி ....... மானுடப்  பரப்பெங்கும்  கவிதையை  வல்லாயுதங்களாய்த் தரித்து  வீரம்  செறிந்த  விளைவுகளைப்  பயன்களாக்கி வருவதைக்  காண்கிறோம்.  சமுதாய  மாற்றங்களை  விளைவிக்க  வல்ல புதிய  கருத்துக்களை  எளிய சொற்களால்  சாமானிய  மனிதர்களின்  உள்ளங்களில்  பதியனிடுகிற கவிஞ்ர்கள்  இன்று பரவலாகப்  போற்றப்படுகின்றனர், அது காலத்தின் தேவை.

பாரதி  தொடங்கி  வைத்த  இந்தப்    பயணம்  தமிழில்  அசுரகதியில்  விரைகிறது , அங்கே 'பாடுபொருளாய்' நானிருக்கிறேன்  என்பதுதான்  காரணம். என்னில்  தோன்றும் எண்ணங்களை , விழைவுகளை,அறச்சீற்றத்தை , ஆற்றாமையை, வேட்கையை....... என்று எல்லாவற்றையும்  தத்தம்  கவிதைகளில்  வெளிப்படுத்துகிற  கவிஞ்ர்களுடன்  நான் நெருக்கமுறவும் செய்கிறேன்.  அவர்கள் படைப்பாளிகள் ! என்னையல்லவா   பேசவும்  காட்டவும் செய்கிறார்கள்.  என்னோடு  இயைந்தவர்களாகக்  காண  வாய்க்கிறதே. இப்படியொரு  சூழல்தான் வளரவேண்டும். வளர்த்தெடுக்கப்படவேண்டும். அத்தகைய  உயரிய  பணியில்  உன்னதப்  பயணத்தில் சௌந்திர சுகனுக்கு   சிறப்பான  இடம் உண்டு. நிலைத்த  பணியாக  களமும், தளமும் வழங்குகிறார். உளமாறப் பாராட்டுவோம்.  கணிசமான  விளைச்சலைக்  காண்கிறோம்.  வாழ்க, வளர்க, என்று வாழ்த்துவோம். 

4  கவிஞ்ர்கள்  4  கவிதைகள்  தேர்வு  பெற்றுள்ளன. நல்லவேளை  முதல், இரண்டாம், மூன்றாம்,....... என்று   தரவரிசைப்  படுத்திவிடமால் 'பரிசுக்குரியனவாக  கவிதைகள்'  என்று தேர்ந்து, என்னையும் சேர்த்துக் கொண்டு...... நல்லது. மகிழ்ச்சி. எல்லா இதழ்களையும்  போலவே 'கூர்'  என்று சற்று  தாராளமாகவே  வாசகர்  கருத்துக்களுக்கு இடமளிக்க, அவர்களும்   படைப்புகளை  வஞ்சனை இல்லாமல் அடித்துத், துவைத்து  அலசிப்  பிழிந்து  காயப்போடுவதையும்  கூட, சில நேரம் அவற்றையும்  ஒரு வகை படைப்புகளே   என்று கொண்டு, ரசிப்பதுண்டு. சகலவிதமான  ரசாயன   பரிசோதனைகளை  தாங்கி நிற்க  தாக்குப்  பிடிக்கப் பயிலுவது  படைப்பாளிகளுக்கு  அவசியமான  பயிற்சியே ..  நாலு பேர்.....நாலு விதமாகத்தானே   பேசுவார்கள். இந்த  கவிதைகளும்  கூட அப்படி 'கூர்'மையாக   அணுகப்பட்டவைதான்.கவிஞர் கிருஷ்ணபிரியா'வின்   கவிதை  கலகம்  (பெயர் நான் தந்தது!) கவிஞ்ர் சக்தி அருளானந்தம் கவிதை "போதிமரமும்  காற்றிலாடும்  உடல்களும்" , வடுவூர் சிவமுரளி யின்  ".எனக்கு நானே "... நாவல் குமாரகேச னின் " ."வயிறு"

கவிஞர் கிருஷ்ணப்ரியா'வின் இந்த கவிதையை 'தினமணி' பாராட்டி, 'முரசொலி' எடுத்தாண்டு என்று சிறப்பு பெற்றமை  குறிக்கத்தக்க தகவல். கோயிலில்  அம்பாள் சிலையை அபிசேகம்  செய்கிற அம்பி'யை அர்ச்சகரைப்  பார்த்து அவர் ஆண் ஆயிற்றே  என்று கவிஞர் பதைத்து எழுப்பிய  கலகக்  குரல் கவிதையானது. என்ன  காரணமோ  இவர் தலைப்பிடவில்லை. படிக்கிறபோது  கவிதையை எண்ணியோ,கவிஞரை  எண்ணியோ  கலகம் என்று குறித்திருக்கிறேன்.  புத்தகம்  என்னுடையது தானே  என்கிற  உரிமை உணர்வில்  இப்படியெல்லாம் பதிவிடுவது வழக்கம்.
                        மரத்தை மறைத்தது மாமதயானை,
                        மரத்தில்  மறைந்தது மாமதயானை         என்பார்  திருமூலர்.  பக்தி மேலீட்டால்  அம்மன் சிலையை பெண்ணாகப் பாவித்து பரிவு  கொண்டு அர்ச்சகர்  ஆண் அர்ச்சகர்  தொட்டுத் தடவி  குளிப்பாட்டுவதைப்  பற்றி   பதைக்கிறார். 'என்னம்மா  இப்படி  எழுதியிருக்கீங்களே  நியாயமா? 'ன்னு  கேட்க வாயைத் திறப்பதற்குள்  கர்ப்பக்கிரகத்தை  களியாட்டக்  கூடமாக்கிய அர்ச்சகர்கள்  காராக்கிரகம்  ஏகிய செய்திகள் செவியில் அறைகின்றன. கவிஞர் கிருஷ்ணப்ரியா காலத்தின் குரலாக நிற்கிறார்.

சக்தி அருளானந்த 'தின் 'போதிமரமும் காற்றிலாடும்  உடல்களும் '  ஒரு படக் கவிதை. பின்புலங்களை கோடிட்டுக்  காட்டிவிட்டு நிகழ்வை விவரித்தால் வலுமிக்க  கருத்தாக்கம்  விளையும். விளைவித்திருக்கிறார். கண்மூடியிருந்தாலும்  நடப்பில் விழித்திருக்கிற  சித்தார்த்தனின் சிந்தனையோட்டத்தினூடே நேற்றைய, இன்றைய  நடப்புகளையும்  நமக்கு  நிதர்சனமாக்கி.. சித்தார்த்தனின் அந்தப்புரத்தில்  படுக்கை அருகேயே   நம்மை  நிறுத்தி..' தன மேல் விழுந்து  கிடந்த மகனின் பிஞ்சுக்கால்களை மெல்ல நகர்த்திவிட்டு  சித்தார்த்தன் எழுகிறான் .நாம்  அங்கேயே  நிற்கிறோம் , .இருட்டுக்குள்ளிருந்து  வெளிப்பட்ட  அவன் பொலிவு ததும்பும்  முகத்தில்  இப்போது  கருமை  படர்ந்திருக்கிறது.
ஒளியைத்   தின்று  நகைக்கிறது இருள். அருமையான  உவமை நயம்.
இருளை வெறித்துக் கொண்டிருக்கின்றன  அவனது விழிகள்,
அவன் வெளிப்பட்டதும், வெறித்து நோக்கி , வெற்றிக் கொண்டது  சமகால  இருளையா, சகலவிதமான  இருளையுமா..... நிகழ் நாளின் இருட்டையா...... நம்மையறியாமல்  தொற்றிக் கொண்ட பதற்றத்தோடு  சித்தார்த்தனை  பின் தொடர  முடியாமல்  இன்னும் நாம் அந்தப்புரத்திலேயே  நிற்கிறோம். 'புறக்காட்சிகளின்  ஒர்மையற்று  வெறித்திருக்கும் கண்மணிகளின்  உயிர்ப்பற்றத் தன்மை  சில்லிட வைக்கிறது. நாம் இன்னும் அரண்மனையுள்தான் நிற்கிறோம். அந்தப் பிஞ்சுக்  கால்களிலேயே நமது பார்வை  பதிந்திருக்கிறது.

வடுவூர் சிவ முரளியின் எனக்கு நானே கவிதையை அருமையாக வடிவமைத்துள்ளார். அவரே  சொல்கிறார், அழகாய்த் தான் இருந்ததாம், அணிந்து  கொண்டபோது, கைகளுக்கு  பொருத்தமாக  தாமே  மெல்ல, மெல்ல  செய்து அணிந்து கொண்டதல்லவா? தேடித் தேடி வளையங்கள்  சேகரித்து  செய்த   சங்கிலி...... எல்லாம்  செய்து  எடுத்து  மாட்டி  இழுத்துப்   பூட்டி விட்டு,,,,,,,சாவியையும்  வீசி   விட்டாராம். என்னவொரு  மிதப்பு,  தெனாவட்டு . இப்போது எல்லாவற்றையும்  உடைத்து   நொறுக்கி  மீட்கவொரு  மீட்பரைத்  தேடி கொண்டிருக்கிறோம்.யார்.... வடுவூர்  முரளியோடு நாமும் தான். விரும்பித்தான்  பூட்டிகொண்டோம், மாட்டிக்கொண்டோம், இப்போது மாட்டியும்  கொண்டோம். சாவியையும் வீசித் தொலைத்தோம். வாழ்க்கையின் இழுத்த  இழுப்பிற்கெல்லாம்  திட்டமில்லாமல் ஓடி மாட்டிக்கொண்டுவிட்டு, மீட்பர் எங்கே என்றால் அவர் செய்த விலங்கில் சங்கிலியில் அவர்  மாட்டிகொண்டு.... யாராவது தென்பட்டால்  சொல்லுங்கள் வடுவூர் சிவ முரளியிடம்  மட்டுமல்ல  நாமும் அவரைத் தான் மீட்பரைதானே தேடுகிறோம்
.
நாவல் குமாரகேசனின் "விமோச்சனம்". தன் குழந்தையின் பசியாற்ற, தான் உட்கார இடம் தேடிய பேருந்துப் பயணியான  ஒரு தாய்.  இவள் தன் குழந்தையின் பசியாற்ற முடியாமல் தடுமாறி  தவிக்கிறாள்.   இப்படி தவிப்பவர்களைப்  பார்த்துத்  தவித்தவர்களாக நாமும் சில  நேரம் நாமே தவித்தும்.... அனுபவப்பட்டிருந்தாலும் , நாவல் குமாரகேசன்  சுட்டும்  பொது சற்றும்   கனம்  குறையாமல்  தவிப்பு  எழத்தான்  செய்கிறது.    நான் தாயுமில்லை, பாலுக்கு  அழும்  குழந்தையுமில்லை .  என்றாலும்  தவிக்கிறேன். நாவல் குமார  கேசன்  தவித்து  நம்மையும்   தவிக்கவிடுகிறார்.
உணர்வுகளை  இடம் மாற்றி, உணர  வைக்கிற, கூடுவிட்டு கூடுபாயும்  இந்த கவிஞ்ர்களை, இவர்களையொத்த  படைப்பாளர்களை , இனம்  காண  இடம் தந்த  சுகனை, ஈன்றவர்க்கு  இன்று மட்டுமா! நினைவுநாள்,  என்றும், எப்போதும்  நினைவை  விட்டு அகலாத  நேயத்தை நட்பை  எண்ணி வணங்கி  எல்லோரையும்  வாழ்த்தி  பாராட்டி  நிறைவு செய்கிறேன்.      
                                                                  தோழமையுடன்.

9 /3 /11  சுகன்  வீட்டில்  பரிசுப் பெற்ற கவிஞர்களின் , கவிதைகளை  பாராட்டி எழுதிய  கட்டுரை   கவிஞர்   மணிச்சுடரால்  வாசிக்கப்பட்டது..

1.03.2011

                                           ..சிநேகிதம்
                                           -------------------
                           
                                வெளியாய் ,
                                 ஒளியாய்,
                                  ஒலியாய்,
                                  வெப்பமாய்,
                                  அன்பாய்,
                                   பரிவாய்,
                                   காதலாய்,
                                   கனிவாய்,
                                   என்னளவாய்,
                                   என்னிருப்பாய்,
                                    நான்
                                    உணர்ந்தவாறாய்
                                    உலகம்......நீ......
                                    உணர்த்தியவாறோ?