மொத்தப் பக்கக்காட்சிகள்

4.08.2011

                                 **** 4  கவிதைகள்,  4  கவிஞ்ர்கள் ****
                                    
                                      
கவிஞ்ர்கள்  பொய்யர்கள் என்றொரு  கருத்து  உண்டு. மிகையாகவும், உவமித்தும், உருவகமாகவும் செய்திகளை வழங்குகிறபோது  உண்மைநிலை  காணாமல் போகிற வாய்ப்பு காரணமானது. மாறாக இன்று  மனிதம்  பேசும்  கவிதைகள்  உண்மையை  முகத்திலறைந்தது  போல  வெளிப்படுத்தி  விடுகின்றன.அழகுணர்ச்சி  என்று  வருணனைகளில்  வாழ்ந்திருந்த  கவிஞ்ர்களும்,  கவிதைகளும்  தரையிறங்கி ....... மானுடப்  பரப்பெங்கும்  கவிதையை  வல்லாயுதங்களாய்த் தரித்து  வீரம்  செறிந்த  விளைவுகளைப்  பயன்களாக்கி வருவதைக்  காண்கிறோம்.  சமுதாய  மாற்றங்களை  விளைவிக்க  வல்ல புதிய  கருத்துக்களை  எளிய சொற்களால்  சாமானிய  மனிதர்களின்  உள்ளங்களில்  பதியனிடுகிற கவிஞ்ர்கள்  இன்று பரவலாகப்  போற்றப்படுகின்றனர், அது காலத்தின் தேவை.

பாரதி  தொடங்கி  வைத்த  இந்தப்    பயணம்  தமிழில்  அசுரகதியில்  விரைகிறது , அங்கே 'பாடுபொருளாய்' நானிருக்கிறேன்  என்பதுதான்  காரணம். என்னில்  தோன்றும் எண்ணங்களை , விழைவுகளை,அறச்சீற்றத்தை , ஆற்றாமையை, வேட்கையை....... என்று எல்லாவற்றையும்  தத்தம்  கவிதைகளில்  வெளிப்படுத்துகிற  கவிஞ்ர்களுடன்  நான் நெருக்கமுறவும் செய்கிறேன்.  அவர்கள் படைப்பாளிகள் ! என்னையல்லவா   பேசவும்  காட்டவும் செய்கிறார்கள்.  என்னோடு  இயைந்தவர்களாகக்  காண  வாய்க்கிறதே. இப்படியொரு  சூழல்தான் வளரவேண்டும். வளர்த்தெடுக்கப்படவேண்டும். அத்தகைய  உயரிய  பணியில்  உன்னதப்  பயணத்தில் சௌந்திர சுகனுக்கு   சிறப்பான  இடம் உண்டு. நிலைத்த  பணியாக  களமும், தளமும் வழங்குகிறார். உளமாறப் பாராட்டுவோம்.  கணிசமான  விளைச்சலைக்  காண்கிறோம்.  வாழ்க, வளர்க, என்று வாழ்த்துவோம். 

4  கவிஞ்ர்கள்  4  கவிதைகள்  தேர்வு  பெற்றுள்ளன. நல்லவேளை  முதல், இரண்டாம், மூன்றாம்,....... என்று   தரவரிசைப்  படுத்திவிடமால் 'பரிசுக்குரியனவாக  கவிதைகள்'  என்று தேர்ந்து, என்னையும் சேர்த்துக் கொண்டு...... நல்லது. மகிழ்ச்சி. எல்லா இதழ்களையும்  போலவே 'கூர்'  என்று சற்று  தாராளமாகவே  வாசகர்  கருத்துக்களுக்கு இடமளிக்க, அவர்களும்   படைப்புகளை  வஞ்சனை இல்லாமல் அடித்துத், துவைத்து  அலசிப்  பிழிந்து  காயப்போடுவதையும்  கூட, சில நேரம் அவற்றையும்  ஒரு வகை படைப்புகளே   என்று கொண்டு, ரசிப்பதுண்டு. சகலவிதமான  ரசாயன   பரிசோதனைகளை  தாங்கி நிற்க  தாக்குப்  பிடிக்கப் பயிலுவது  படைப்பாளிகளுக்கு  அவசியமான  பயிற்சியே ..  நாலு பேர்.....நாலு விதமாகத்தானே   பேசுவார்கள். இந்த  கவிதைகளும்  கூட அப்படி 'கூர்'மையாக   அணுகப்பட்டவைதான்.கவிஞர் கிருஷ்ணபிரியா'வின்   கவிதை  கலகம்  (பெயர் நான் தந்தது!) கவிஞ்ர் சக்தி அருளானந்தம் கவிதை "போதிமரமும்  காற்றிலாடும்  உடல்களும்" , வடுவூர் சிவமுரளி யின்  ".எனக்கு நானே "... நாவல் குமாரகேச னின் " ."வயிறு"

கவிஞர் கிருஷ்ணப்ரியா'வின் இந்த கவிதையை 'தினமணி' பாராட்டி, 'முரசொலி' எடுத்தாண்டு என்று சிறப்பு பெற்றமை  குறிக்கத்தக்க தகவல். கோயிலில்  அம்பாள் சிலையை அபிசேகம்  செய்கிற அம்பி'யை அர்ச்சகரைப்  பார்த்து அவர் ஆண் ஆயிற்றே  என்று கவிஞர் பதைத்து எழுப்பிய  கலகக்  குரல் கவிதையானது. என்ன  காரணமோ  இவர் தலைப்பிடவில்லை. படிக்கிறபோது  கவிதையை எண்ணியோ,கவிஞரை  எண்ணியோ  கலகம் என்று குறித்திருக்கிறேன்.  புத்தகம்  என்னுடையது தானே  என்கிற  உரிமை உணர்வில்  இப்படியெல்லாம் பதிவிடுவது வழக்கம்.
                        மரத்தை மறைத்தது மாமதயானை,
                        மரத்தில்  மறைந்தது மாமதயானை         என்பார்  திருமூலர்.  பக்தி மேலீட்டால்  அம்மன் சிலையை பெண்ணாகப் பாவித்து பரிவு  கொண்டு அர்ச்சகர்  ஆண் அர்ச்சகர்  தொட்டுத் தடவி  குளிப்பாட்டுவதைப்  பற்றி   பதைக்கிறார். 'என்னம்மா  இப்படி  எழுதியிருக்கீங்களே  நியாயமா? 'ன்னு  கேட்க வாயைத் திறப்பதற்குள்  கர்ப்பக்கிரகத்தை  களியாட்டக்  கூடமாக்கிய அர்ச்சகர்கள்  காராக்கிரகம்  ஏகிய செய்திகள் செவியில் அறைகின்றன. கவிஞர் கிருஷ்ணப்ரியா காலத்தின் குரலாக நிற்கிறார்.

சக்தி அருளானந்த 'தின் 'போதிமரமும் காற்றிலாடும்  உடல்களும் '  ஒரு படக் கவிதை. பின்புலங்களை கோடிட்டுக்  காட்டிவிட்டு நிகழ்வை விவரித்தால் வலுமிக்க  கருத்தாக்கம்  விளையும். விளைவித்திருக்கிறார். கண்மூடியிருந்தாலும்  நடப்பில் விழித்திருக்கிற  சித்தார்த்தனின் சிந்தனையோட்டத்தினூடே நேற்றைய, இன்றைய  நடப்புகளையும்  நமக்கு  நிதர்சனமாக்கி.. சித்தார்த்தனின் அந்தப்புரத்தில்  படுக்கை அருகேயே   நம்மை  நிறுத்தி..' தன மேல் விழுந்து  கிடந்த மகனின் பிஞ்சுக்கால்களை மெல்ல நகர்த்திவிட்டு  சித்தார்த்தன் எழுகிறான் .நாம்  அங்கேயே  நிற்கிறோம் , .இருட்டுக்குள்ளிருந்து  வெளிப்பட்ட  அவன் பொலிவு ததும்பும்  முகத்தில்  இப்போது  கருமை  படர்ந்திருக்கிறது.
ஒளியைத்   தின்று  நகைக்கிறது இருள். அருமையான  உவமை நயம்.
இருளை வெறித்துக் கொண்டிருக்கின்றன  அவனது விழிகள்,
அவன் வெளிப்பட்டதும், வெறித்து நோக்கி , வெற்றிக் கொண்டது  சமகால  இருளையா, சகலவிதமான  இருளையுமா..... நிகழ் நாளின் இருட்டையா...... நம்மையறியாமல்  தொற்றிக் கொண்ட பதற்றத்தோடு  சித்தார்த்தனை  பின் தொடர  முடியாமல்  இன்னும் நாம் அந்தப்புரத்திலேயே  நிற்கிறோம். 'புறக்காட்சிகளின்  ஒர்மையற்று  வெறித்திருக்கும் கண்மணிகளின்  உயிர்ப்பற்றத் தன்மை  சில்லிட வைக்கிறது. நாம் இன்னும் அரண்மனையுள்தான் நிற்கிறோம். அந்தப் பிஞ்சுக்  கால்களிலேயே நமது பார்வை  பதிந்திருக்கிறது.

வடுவூர் சிவ முரளியின் எனக்கு நானே கவிதையை அருமையாக வடிவமைத்துள்ளார். அவரே  சொல்கிறார், அழகாய்த் தான் இருந்ததாம், அணிந்து  கொண்டபோது, கைகளுக்கு  பொருத்தமாக  தாமே  மெல்ல, மெல்ல  செய்து அணிந்து கொண்டதல்லவா? தேடித் தேடி வளையங்கள்  சேகரித்து  செய்த   சங்கிலி...... எல்லாம்  செய்து  எடுத்து  மாட்டி  இழுத்துப்   பூட்டி விட்டு,,,,,,,சாவியையும்  வீசி   விட்டாராம். என்னவொரு  மிதப்பு,  தெனாவட்டு . இப்போது எல்லாவற்றையும்  உடைத்து   நொறுக்கி  மீட்கவொரு  மீட்பரைத்  தேடி கொண்டிருக்கிறோம்.யார்.... வடுவூர்  முரளியோடு நாமும் தான். விரும்பித்தான்  பூட்டிகொண்டோம், மாட்டிக்கொண்டோம், இப்போது மாட்டியும்  கொண்டோம். சாவியையும் வீசித் தொலைத்தோம். வாழ்க்கையின் இழுத்த  இழுப்பிற்கெல்லாம்  திட்டமில்லாமல் ஓடி மாட்டிக்கொண்டுவிட்டு, மீட்பர் எங்கே என்றால் அவர் செய்த விலங்கில் சங்கிலியில் அவர்  மாட்டிகொண்டு.... யாராவது தென்பட்டால்  சொல்லுங்கள் வடுவூர் சிவ முரளியிடம்  மட்டுமல்ல  நாமும் அவரைத் தான் மீட்பரைதானே தேடுகிறோம்
.
நாவல் குமாரகேசனின் "விமோச்சனம்". தன் குழந்தையின் பசியாற்ற, தான் உட்கார இடம் தேடிய பேருந்துப் பயணியான  ஒரு தாய்.  இவள் தன் குழந்தையின் பசியாற்ற முடியாமல் தடுமாறி  தவிக்கிறாள்.   இப்படி தவிப்பவர்களைப்  பார்த்துத்  தவித்தவர்களாக நாமும் சில  நேரம் நாமே தவித்தும்.... அனுபவப்பட்டிருந்தாலும் , நாவல் குமாரகேசன்  சுட்டும்  பொது சற்றும்   கனம்  குறையாமல்  தவிப்பு  எழத்தான்  செய்கிறது.    நான் தாயுமில்லை, பாலுக்கு  அழும்  குழந்தையுமில்லை .  என்றாலும்  தவிக்கிறேன். நாவல் குமார  கேசன்  தவித்து  நம்மையும்   தவிக்கவிடுகிறார்.
உணர்வுகளை  இடம் மாற்றி, உணர  வைக்கிற, கூடுவிட்டு கூடுபாயும்  இந்த கவிஞ்ர்களை, இவர்களையொத்த  படைப்பாளர்களை , இனம்  காண  இடம் தந்த  சுகனை, ஈன்றவர்க்கு  இன்று மட்டுமா! நினைவுநாள்,  என்றும், எப்போதும்  நினைவை  விட்டு அகலாத  நேயத்தை நட்பை  எண்ணி வணங்கி  எல்லோரையும்  வாழ்த்தி  பாராட்டி  நிறைவு செய்கிறேன்.      
                                                                  தோழமையுடன்.

9 /3 /11  சுகன்  வீட்டில்  பரிசுப் பெற்ற கவிஞர்களின் , கவிதைகளை  பாராட்டி எழுதிய  கட்டுரை   கவிஞர்   மணிச்சுடரால்  வாசிக்கப்பட்டது..